Friday, November 6, 2009

தேடல்

வந்த காரியம்
விரைந்து முடிந்ததால்...
முன்பதிவு செய்த
அரசுப் பேருந்துக்கு
முழுதாக நான்கு மணி நேரம்
மிச்சம் இருந்தது.

காலம் கடத்த...
படிக்கவும்
குடிக்கவுமாய் ஏற்பாடு
நண்பர்களிருவருக்கும்.

பாத்து பேரிடம் விசாரித்தால்
ஏழு பேர்
தெரியாது என்றார்கள்
மூன்று பேர்
நான் ஊருக்குப் புதுசுங்க!'

அதையும் மீறி
அலைந்து திரிந்து
ஒருவழியாகக் கண்டுபிடிக்க முடிந்தது
அடுத்த தெருவில் இருக்கும்
பொது நூலகத்தை!

நண்பனுக்குத்தான்
சிரமமே இல்லையாம்...
பேருந்து நிலையத்தின்
நுழைவு வாயிலிலும்
வெளியேறும் வாயிலிலும்
பிரதான சாலையிலும்
இன்னபிற இடங்களிலுமாய்
அரசு மதுக் கடைகள்!

அக்காவின் விரதமும் அகதி முகாம் சோறும்!

அக்காவின் துப்புரவு பற்றி
ஊரே அறியும்
அத்தானின் கவிதைகளும்
அக்காவின் பண்ட பாத்திரங்களும்
எப்போதுமே பிரகாசிக்கக் கூடியவை
அடுப்பு கரி எடுத்து
நொறுக்கித் தூளாக்கி
பற்களையும் பாத்திரங்களையும்
மினுக்குவதில்
அக்காவுக்கு நிகர் அக்காவேதான்
முகம் கழுவாமல்
அடுப்படி பக்கம் போனதில்லை
இதுநாள் வரை
விரத நாட்களில்
அக்காவின் வீடு
இன்னும் மங்களகரமாயிருக்கும்
மதியம் நான்கைந்து கறியுடன்
தயிர் மோர் வடை பாயாசமென
அசத்திவிடுவாள்.
வீட்டு வாசலில் வந்து
காகம் கரையும் நாட்களில்
ஒருபிடி அரிசியேனும் அதிகமாகத்தான்
சமைப்பாள்
விருந்தினர் எவரேனும் வருவார் என்ற
நம்பிக்கையில்
தெய்வங்கள் மீது
அக்கா வைத்திருந்த நம்பிக்கையும்
அசாத்தியமானது.
திருவிழாக் காலங்களில்
கோயில்களைப் போலவே
அக்காவின் வீட்டிலும்
சனங்கள் நிரம்பி வழியும்
இன்று
திருவிழா முடிந்த வீதியென ஆனது
அக்காவின் வாழ்வு.
எனினும்
நல்லூர் முருகன் கோயில்
கொடியேறிவிட்டதால்
அக்காவும் விரதம் இருப்பால்
முட்கம்பி வேலிக்குள்,
அரசு செலவில்
அவித்து வரும்
உணவை உண்டபடியும்
கூடாரம் ஒன்றுக்குள்
குடியிருந்தபடியும்!